சர்வதேச அளவில் ஆரக்கிள் நடத்திய 'திங்க் க்விஸ்ட் 2012’ இணையதள உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் இடம் பெற்று அசத்தி இருக்கிறார்கள். 51 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஆறு பேர் இணைந்த குழு வெற்றி பெற்று உள்ளது. இதில் நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வருண் ஆர்.சேகர், மணிகண்டன், வருணா வெங்கடேஷ், ராஜேஷ்வர் எனும் வெற்றிபெற்ற நான்கு மாணவர்களைச் சந்தித்தேன்.
''இணையதளத்துல ஆரக்கிள் போட்டி அறிவிச்சதைப் பார்த்தோம். 'ஆறு பேர் டீமுக்குக் கட்டாயம் தேவை’னு சொல்லி இருந்தாங்க. க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த டிமிட்ரிஸ், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கியூல்லம் இந்த ரெண்டு பேரும் எங்களோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ். போட்டியைப் பற்றிச் சொன்னதும், ஆர்வமா எங்களோட இணைஞ்சுட்டாங்க.
இப்போ கம்ப்யூட்டர்களின் ஆதிக்கம்தான் அதிகம். இணையதளம் இல்லாம எந்த வேலையும் நடக்கிறதது இல்லை. ஆனா, அந்த இணையதளத்துல நிறையத் தப்பு நடக்குது. இணையதள அனுமதி இல்லாம தகவல்களைத் திருடுறாங்க.
இந்த மாதிரி நடவடிக்கைகள் இனி நடக்கக்கூடாதுன்னு யோசிச்சோம். சைபர் செக்யூரிட்டி இருக்கிற 'செக்யூர்’னு ஒரு இணையதளத்தை உருவாக்கினோம். பல எக்ஸ்பர்ட்களிடம் இன்டர்வியூ எடுத்தோம். சில சாஃப்ட்வேர்களை எப்படித் தவறாகப் பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம். இனி நாங்கள் உருவாக்கின செக்யூரிட்டியைப் பயன்படுத்தினா தடை செய்யப்பட்ட பக்கத்தைப் பார்க்க முடியாது. ஆன்லைன் பேங்கிங், கிரெடிட் கார்டு, சைபர் க்ரைம்னு எந்தத் தப்பும் நடக்காது. எல்லாம் பாதுகாப்பா இருக்கும். இந்த இணையத்தை உருவாக்கியதுக்குத்தான் எங்களுக்கு முதல் பரிசு கிடைச்சது. இந்த வெற்றிக்குக் காரணம் என் கல்லூரிதான். உதவித் தொகை தந்ததோட, நிறைய உற்சாகமும் கொடுத்தாங்க'' என்று சிரிக்கிறார் டீம் லீடர் மணிகண்டன்.

''நான் லண்டன்ல இன்ஜினீயரிங் படிக்கிறேன். பாதுகாப்பான இணையதளத்தை உருவாக்க நிறைய வொர்க் அவுட் பண்ணவேண்டி இருந்தது. ஆனா, இந்திய நேரமும் லண்டன் நேரமும் மாறி இருப்பதால ஒரே நேரத்துல தொடர்புகொள்ள முடியல. இதைப் பெருசா நினைச்சா சாதிக்க முடியாதுனனு இரவு பகல்னு பார்க்காம வேலை செஞ்சோம். பேஸ்ஃபுக் மூலமாதான் எல்லாத் தகவல்களையும் பகிர்ந்துக்கிட்டோம். இப்போ லேப்டாப், 5,000 டாலர் பணம், விருது கிடைச்சிருக்கு'' என்று சிலாகிக்கிறார் வருணா வெங்கடேஷ்.
''ஆரக்கிள்ல இன்டர்ன்ஷிப் பண்ணலாம். விருப்பம் இருந்தா ஆரக்கிள்லயே வேலைக்குச் சேர்ந்துக்கலாம்னு சொல்லி இருக்காங்க'' குதூகலிக்கிறார் ராஜேஷ்வர்.
''வெப் டெவலப்மென்ட்ல ஒரு கை பார்க்கணும், டெக்னாலஜியில எக்ஸ்பர்ட் ஆகணும். க்ரீஸ் டிமிட்ரிஸ், கியூல்லம் ரெண்டு பேரையும் நாங்க நேர்ல பார்த்ததே இல்லை. ஃபேஸ்புக் மூலம்தான் பேசிக்கிட்டு இருக்கோம். அக்டோபர் மாதம் முதல் வாரம் அமெரிக்காவில நடக்கிற பரிசுபெறும் விழாவிலதான் சந்திக்கப்போறோம்'' என்கிறார் வருண் ஆர்.சேகர்!
வாழ்த்துகள் நண்பர்களே!
-
க.நாகப்பன்
படங்கள்: எம். உசேன்
No comments:
Post a Comment